ஆரம்ப காலங்களில் உளவியலானது சமய நம்பிக்கைகளுடன் பின்னிப் பிணைந்ததாகக் காணப்பட்டது.இன்றைக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களும் கூட உளவியலை ஒரு விஞ்ஞான ரீதியான நிலையில் நோக்கவில்லை. ஒருவருக்கு உளநோய் ஏற்பட்டால் சமூகம் அவர்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதியது. "பேய் பிடித்தல்" போன்ற மூடநம்பிக்கைகளுக்குள்ளே வைத்து நோக்கியது.
இவ்வாறான நிலையில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "சிக்மன்ட் புரொய்ட்" என்பவர் உள நோய்களும் உடலில் ஏற்படுகின்ற ஏனைய நோய்களைப் போல சிகிச்சை அளிக்கக் கூடிய செயன்முறையாகும். இதற்குத் தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் போன்ற கருத்துக்களை முன்வைத்து அதனை ஆய்வுகளின் மூலம் நெறிப்படுத்தினார். இவ்வாறான விடயங்களை மேற்கொண்டு உளவியலை ஒரு விஞ்ஞான பூர்வமான நிலைக்குக் கொண்டு வந்தார்.
மனநோய் என்பது ஒருவரை மிகுந்த பாதிப்புக்குட்படுத்தக் கூடியது. எனவே பாதிக்கப்பட்டவரின் மனதின் நிலைப்பாட்டினைக் கேட்டறிந்நு அவரின் ஆழ்மனதில் புதைந்து காணப்படும் குறைகளை இனங்கண்டு அவற்றைக் களைய வேண்டும். அதாவது அவரை உளவளத்துணை மூலம் நல்ல முறையில் வழிப்படுத்தல் வேண்டும். அவ்வாறு செய்யாதவரை எவ்வித சிகிச்சைகளின் மூலமும் நோயைக் குணப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார். இதற்காக அவர் முன்வைத்த சிகிச்சை முறையே "உளப்பகுப்பாய்வு அணுகுமுறை "எனப்பட்டது.
சிக்மன்ட் புரொய்ட் மூளையை மையமாகக் கொண்டு மனதினை நனவிலி மனம், நனவு மனம், நனவடி மனம் என மூன்று வகையாகப் பிரித்தார். இதில் நனவிலி மனம் (இட்) என்பது, இன்ப வேட்கைக் கோட்பாட்டுக்கமைய செயற்படக் கூடியதாகும். இங்குதான் உந்துதல்கள், உள்ளுணர்வுகள், ஆசைகள் போன்ற அனைத்தும் காணப்படும். மேலும் இது உயிரியல் சார்ந்ததாகவும் யதார்த்த உலகுடன் தொடர்பற்றும் காணப்படும். உந்துதல்கள் ஏற்படுகின்ற வேளை உடனடியாக அதனை நிறைவேற்றும்படி நிர்ப்பந்திக்கும். சூழலின் உண்மைத் தன்மையைப் பற்றிக் கவனம் செலுத்தாது. இதுவே மனதின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாகவும் புரொய்ட் குறிப்பிடுகின்றார்.
அதற்கடுத்த பகுதியாக நனவு மனம் (ஈகோ) காணப்படுகின்றது. இது குழந்தைப் பருவத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட மாட்டாது. குழந்தை வளர்ச்சியடையும் வேளை யதார்த்த உலகுடன் இணங்கிப் போகவேண்டிய தேவை எழுவதனால் இது தோற்றம் பெறும். "இட்"இன் ஒரு பகுதியே சூழலின் செல்வாக்கினால் "ஈகோ"வாக மாற்றம் பெறும். இது நனவிலி மனத்தின் மூலமாக ஏற்படுத்தப்படும் உந்துதல்களை யதார்த்த உலகினைப் புரியச் செய்வதன் மூலமாக அதற்கேற்ற வகையில் நிறைவேற்றிக்கொள்ள உதவி புரியும்.
நனவடி மனம் என்பதுசுமார் ஆறு வயதளவில் தோற்றம் பெறும் ஒன்றாகும். பெற்றோர், ஆசிரியரின் வழிநடத்தல்கள், சமூக நடத்தைகள் அறக்கோட்பாடுகள், சமய நம்பிக்கைகள் என்பவற்றை உள்வாங்கி ஒழுக்க நெறிக் கோட்பாட்டுக்கமைய செயற்படும்.
ஒருவருக்கு சிறுவயதில் ஏற்படுகின்ற அதீத பயம், மகிழ்ச்சி, விருப்பு வெறுப்புக்கள், கோபதாபங்கள் போன்றன மனதின் நனவிலி நிலைக்குச் சென்று விடுகின்றது. இதன் மூலமாகவே ஒரு மனிதனின் ஆளுமை கட்டியெழுப்பப் படுகின்றது. என புரொய்ட் குறிப்பிடுகின்றார்.
இதனைத்தவிர மனநோய் அல்லது நரம்புக் கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலியல் தேவைகள் பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையையும் வலியுறுத்தினார். இதற்காக இவர்,
1. வாய்வழி இன்பநிலைப் பருவம்.
2. குதவழி இன்பநிலைப் பருவம்.
3. பாலுறுப்பு இன்பநிலைப் பருவம்.
4. மறைநிலைப் பருவம்.
5. பாலியல் விருத்திப் பருவம்.
போன்ற ஐந்து விருத்திப் பருவங்களை எடுத்துக் காட்டினார். ஒரு குழந்தை பிறந்தது முதல் தாயின் மார்பகங்களை சுவைப்பதன் மூலம் இன்பத்தை அனுபவிக்கிறது. பின்னர் தான் விரும்பியபடி மலசலம் கழித்தல், பாலுறுப்புக்களைத் தொட்டுத் தடவி விளையாடுவதன் மூலம் இன்பநிலை அடைதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றது. இதன் பின்னரான கட்டத்தில் வெட்கத்தை உணர்வதன் மூலம் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துக் கொள்வதாகவும் புரொய்ட் குறிப்பிடுகின்றார். இவர் பாலுறுப்பு இன்ப நிலைப் பருவத்தினை ஓடிபல் சிக்கல், இலேக்ட்ரா சிக்கல் என மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து நோக்கினார். இவ்வாறாக மேற்கூறப்பட்ட பாலியல் விருத்திப் பருவங்களில் ஆசைகள், தேவைகள் என்பன அடக்கி ஒடுக்கப்படும் போது மனிதன் உளப்பாதிப்புகளுக்கு உட்படுகின்றான். எனக் குறிப்பிடுகின்றார். இவ்வகையான பாதிப்புக்குட்படுவோரை சிறந்த முறையில் அணுகி அவருடைய மனோபாவங்கள் மற்றும் பிரச்சினையைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காக வழிப்படுத்துவதன் மூலம் அவரை யதார்த்த நிலைக்குக் கொண்டுவர முடியுமென புரொய்ட் குறிப்பிடுகின்றார்.
உசாத்துணைகள்
- சிவகுமார்.எம்(2006), "ஆளுமை உளவியல்", சேமமடு புத்தகசாலை, பீபிள்ஸ் பார்க், கொழும்பு-11.
- https://ta.m.wikipedia.org
- tezme.org>schoolnotes.pdf
- archives.thinakaran.lk>article
ஸம்றத் றஹ்மான்.
விடுகை வருடம்.
கல்விப் பீடம்.
கொழும்புப் பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment