Saturday, 22 June 2019

தனியாள்மையக் கோட்பாடு

 உளவளத்துணை சிகிச்சை முறைகளுள் தனியாள் மையக் கோட்பாடு.

உளவளத்துணைசார் உளவியல் கோட்பாடுகளுள் தனியாள் மையக் கோட்பாடும் (Person-centred Theory) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இக்கோட்பாட்டினை முன்வைத்தவர் கார்ள் றொஜர்ஸ் (CarlRojers) எனும் உளவியலாளராவார். இவர் 1942 - 1961 வரையான காலப்பகுதிக்குள் தமது கோட்பாட்டினை விருத்தி செய்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைக்கு முக்கோண அமைப்பில் மூன்று காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
1. சுய எண்ணக்கரு (Self Concept)
2. மொத்த தனிநபர் ( Total Individual)
3. புலத்தோற்றக்களம் ( Phenomenal field)
என்பனவே மேற்குறிப்பிட்ட விடயங்களாகும்.

சுய எண்ணக்கரு என்பது ஒருவனுக்கு மிக முக்கியமானதொன்றாகும். எல்லா மனிதருக்கும் தம்மைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் புலக்காட்சி போன்றன மனதினுள் காணப்படும். இவ்வாறு காணப்படும் புலக்காட்சிக்கமைய தம்மை மதிப்பீடு செய்கின்ற விதமே சுயஎண்ணக்கருவாகும். உதாரணமாக, ஒருவர் தன்னை சமூகத்தில் பலவீனமானவராகக் கண்டால் இதனூடாக தமக்குள்ளே தம்மைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றி வாழ்க்கை விரக்தியடையக்கூடியநிலை ஏற்படும். இது அவரை உளநோயாளியாகவும் மாறுவதற்கு வாய்ப்பளிக்கிறது.  எனவே ஒவ்வொரு மனிதனும் தம்மைப் பற்றிய பலங்கள், பலவீனங்கள், ஆற்றல்கள், மதிப்பு என்பவைகளை தாமே சிறந்த முறையில் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென றொஜர்ஸ் குறிப்பிடுகின்றார்.

ஒருவனுடைய ஒரேயொரு குண இயல்பை மாத்திரம் வைத்துக் கொண்டு அவனது ஒட்டு மொத்த முழு நடத்தையையும் மதிப்பிடல் கூடாது. என்பதையே மொத்தத் தனிநபர் நடத்தை என்பதன் மூலம் எடுத்துக் காட்டினார்.

புலத்தோற்றக்களம் என்பது ஒருவனிடம் காணப்படும் அறிவு, அனுபவம் போன்றவைகளாகும். இது அனைவருக்கும் ஒரே மாதிரியாகக் காணப்பட மாட்டாது. ஆளுக்காள் வேறுபடும் தன்மை கொண்டது. இதன் மூலமே ஒவ்வொருவருடைய நடத்தைகளும் தீர்மானிக்கப் படுகின்றன. உளவளத்துணையில் இம்மூன்று எண்ணக்கருக்களும் முக்கியமானவைகளாகும். இவை ஒருவனுடைய உளச்சிக்கல்களை அறிந்து கொள்ள உளவளத்துணையாளருக்கு உதவியாக அமைகின்றன.

ஒருவர் புலக்காட்சி பெறும் விதத்தினைப் பொறுத்தே துக்கம், மகிழ்ச்சி, விருப்பு, வெறுப்பு போன்றன ஏற்படுவதாக இவர் குறிப்பிடுகின்றார். இதற்காக பிரச்சினையுடன் வரும் சேவை நாடியை உன்னிப்பாக செவிமெடுப்பதுடன் குறித்த பிரச்சினை பற்றி சேவை நாடி அறிந்து வைத்துள்ள படியே உளவளத்துணையாளரும் விளங்கி தமது மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். மாற்றத்தை அடையவும் யதார்த்த உலகினைப் புரிந்து கொள்ளவும் சேவை நாடியே தமக்குள் சுயஅபிவிருத்தியை ஏற்படுத்தல் வேண்டும். அத்துடன் தனது புலக்காட்சியையும் உலகையும் சமநிலைப்படுத்தி நோக்குதல் வேண்டும். இவ்வாறான நிலையை அடைவதே இக்கோட்பாட்டின் பிரதான நோக்கமாகும். இங்கு உளவளத்துணையாளரின் நேரடியான தொடர்பு காணப்படாது.

எனவே, உளநோய்கள் ஏற்படும் வேளை பல்வேறுபட்ட உள சிகிச்சை முறைகளைக் கையாள்வதை விட அந்தந்த மனிதர் தம்மைப்பற்றியும் புறச்சூழல் பற்றியும் புலக்காட்சி காணும் முறையை நல்ல முறையிலும் சரியானதாகவும் அமைத்துக் கொள்வதன் மூலம் உளப் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியுமென றொஜர்ஸ் இக்கோட்பாட்டின் மூலம் முன்வைக்கின்றார்.


உசாத்துணைகள்

  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (2003), "கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் தொகுதி-1", நாவல, நுகேகொட.
  • அருட்தந்தை டேமியன்.எஸ்.,(2005)  , "உளவியல்", அமதி வெளியீடு,  யாழ்ப்பாணம்.
  • https://courses.lumenlearning.com/intropsychomaster/humanistic-approach.
  • https://www.thoughtco.com/carl-rogers-4588296



ஸம்றத் றஹ்மான் .
விடுகை வருடம்.
கல்விப் பீடம்.
கொழும்புப் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment